கொரோனா பரவல் எதிரொலி: மும்பையில் பொது இடங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை

மும்பையில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த பொது இடங்களில் கட்டாய பரிசோதனை செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் எதிரொலி: மும்பையில் பொது இடங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தலைநகர் மும்பையை பொறுத்தவரை புதிதாக 2 ஆயிரத்து 982 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 61 ஆகி உள்ளது. இதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 37 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தொற்று நோயின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி புதிய பரிசோதனை திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி பொது இடங்களில் கண்ட இடங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் பொது மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனை முற்றிலும் இலவசம். ஷாப்பிங் மால்களில் மட்டும் கட்டணம் வசூலித்து கட்டாய பரிசோதனை செய்யப்படும். இதற்காக பொது இடங்களில் மக்கள் தோராயமாக தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கனவே பரிசோதனை செய்தவர்கள் கூட மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு நாள்தோறும் 47 ஆயிரத்து 800 பேருக்கு விரைவு பரிசோதனையான ஆன்டிஜென் முறையில் தொற்று நோய் கண்டறியப்படும். நகரில் அதிகரித்து வரும் தொற்று பரவலை சரிபார்க்க நாம் இப்போது விழுங்க வேண்டிய கசப்பான மாத்திரை இது. இந்த பரிசோதனைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மறுத்தால், 1897-ம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com