கொரோனா தொற்று எதிரொலி: புனே மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக புனே மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று எதிரொலி: புனே மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
Published on

புனே,

மராட்டியத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இதையடுத்து ஏற்கனவே யவத்மால், அமராவதி ஆகிய மாவட்டங்களில் பகல்நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. தலைநகர் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களிலும் தொற்று பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு புனே மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகளுடன், துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் புனே மாவட்ட கலெக்டர் சவுரப் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு அதை கட்டுப்படுத்த புனே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.

மேலும் புனே மாவட்டத்தில் ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள், பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மீண்டும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு வருகிற 28-ந்தேதி வரை அமலில் இருக்கும். ஓட்டல்கள், மதுபான பார்கள் போன்றவை இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இரவு 11 மணிக்கு மேல் சாலைகள், தெருக்களில் அத்தியாவசிய பணியாளர்களை தவிர வேறு யாரேனும் சுற்றித்திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பரிசோதனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதைத்தவிர திருமண விழா, மாநாடு, மற்றும் பேரணி போன்ற பொது நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி பெற போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில துணை முதல்-மந்திரி அஜித்பவார் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com