கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கியது

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்கான உகான் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கியது.
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கியது
Published on

புதுடெல்லி,

சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. ஹுபெய் மாகாணத்தில் குறிப்பாக உகான் நகரில் 250 முதல் 300 இந்தியர்கள் வரை சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள்.

அவர்களை பாதுகாப்பாக அழைத்துவர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உகான் நகரில் உள்ள இந்தியர்களை அழைத்துவர இந்திய அரசு நடவடிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதுபற்றி வெளியுறவு அமைச் சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியதாவது:-

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சீன அரசு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறார்கள். அவர்களது பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் நடவடிகை எடுத்து வருகிறார்கள். இதுபற்றிய கூடுதல் தகவல்களை அவ்வப்போது வெளியிடுவோம் என்று அவர் கூறினார்.

இந்தியர்களை அழைத்து வருவதற்காக மும்பையில் ஏர் இந்தியாவின் ஜும்போ விமானம் தயார் நிலையில் உள்ளது. இந்த போயிங் 747-400 விமானத்தில் 423 இருக்கைகள் உள்ளது. வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக விமான நிறுவனம் காத்திருக்கிறது.

வைரஸ் தாக்குதல் எல்லைக்குள் எங்கள் ஊழியர்கள் விமானத்தை இயக்க இருப்பதால் சுகாதார அமைச்சகத்தின் அனுமதி முக்கியமாக தேவை என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகளுக்கு தற்போது சென்னை உள்ளிட்ட 7 விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதுவரை 35 ஆயிரம் பயணிகளுக்கு சோதனை நடத்தியதில் 20 பேருக்கு காய்ச்சல் இருந்தது. அவர்களது ரத்த மாதிரியை சோதித்ததில் யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார்.

இனி 20 விமான நிலையங்களில் சோதனை நடத்தப்படும். அதேபோல இதுவரை புனே ஆய்வகத்தில் மட்டும் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இனி கூடுதலாக ஆலப்புழை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களிலும் பரிசோதனை நடத்தப்படும். வருங்காலங்களில் 10 ஆய்வகங்களில் இந்த சோதனை நடைபெறும் என்றும் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

இதற்கிடையே டெல்லியை சேர்ந்த 3 பேருக்கு ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 24 முதல் 48 வரை வயதுள்ள அவர்களில் 2 பேர் சீனாவில் இருந்து ஒரு வாரம் முன்னதாகவும், மற்றொருவர் ஒரு மாதம் முன்னதாகவும் டெல்லி திரும்பியவர்கள்.

3 பேரும் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக சென்றார்கள். சந்தேகத்தின் பேரில் அவர்கள் ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்காக புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த முடிவு தெரிந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா? என்பது தெரிய வரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com