நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார் - தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

போபால்,

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேநேரம் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை செயல்படுத்துவதற்கு பெரும் சவால்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் அதிகாரிகள் போபால் சென்றுள்ளனர்.

அங்கு நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் குமாரிடம், ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ராஜீவ் குமார் பதிலளிக்கும்போது கூறியதாவது:-

தேர்தல் கமிஷனின் கடமை

அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு குறித்த காலத்துக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் கடமை ஆகும்.

இந்த முறை, புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெறும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த காலக்கெடு முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் கமிஷன் பொதுத் தேர்தலை அறிவிக்கலாம். இதே வழிமுறை மாநில சட்டசபை தேர்தல்களுக்கும் பொருந்தும்.

அந்தவகையில் அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராக இருக்க வேண்டும். அதன்படி நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம்.

இலவசங்கள் அறிவித்தல்

வாக்காளர்களுக்கு தாங்கள் வழங்குவதைப் பற்றி (இலவசங்கள்) தேர்தலின்போது வாக்காளர்களுக்குத் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு, அதற்கான செலவினங்கள் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றையும் கட்சிகள் குறிப்பிட வேண்டும்.

இது தொடர்பாக விரிவான அறிக்கையை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது. ஆனால் தேர்தல்களில் இலவசங்கள் தொடர்பான விவகாரம் சுப்ரீம் கோர்ட்டையும் எட்டி இருக்கிறது.

இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய பிரதேசத்தில் சுமார் 5.5 கோடி வாக்காளர்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் எனக்கூறிய ராஜீவ் குமார், அடுத்த மாதம் 5-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com