ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது

வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சரிந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்பு, 2022-23 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 4.3 சதவீதமாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி துறையில் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் வளர்ச்சி குறைந்துள்ளது.

அதேசமயம், வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. அண்டை நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 4.6 சதவீதமாக உள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, வேளாண் துறையின் மொத்த மதிப்பு கூட்டல் (ஜி.வி.ஏ) 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 1.7 சதவீதமாக இருந்தது. அது இந்த ஆண்டு 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், உற்பத்தித் துறையின் ஜி.வி.ஏ. வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 2.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 14.3 சதவீதமாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டில் 6 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 6.7 சதவீதம் என்பதில் மாற்றம் இல்லை. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com