ரூ.6 ஆயிரம் கோடி மோசடி; போலி நிதி நிறுவன அதிபர்கள் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட பணத்தை மோசடி செய்தது தொடர்பாக போலி நிதி நிறுவன அதிபர்கள் 3 பேரை அமலாக்க இயக்கக அதிகாரிகள் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட பணத்தை மோசடி செய்தது தொடர்பாக போலி நிதி நிறுவன அதிபர்கள் 3 பேரை அமலாக்க இயக்கக அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அமலாக்க இயக்கக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

அக்ரி கோல்டு குழும நிறுவனங்களின் உரிமையாளர்களான அவ்வா வெங்கடராம ராவ், அவ்வா வெங்கடநாரயண ராவ், அவ்வா ஹேமசுந்தர வரப்பிரசாத் ஆகியோர் மீது, முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தது தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, ஒடிசா, மராட்டியம், அந்தமான் நிகோபர் தீவுகள், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் பணத்தையும் இவர் மோசடி செய்துள்ளனர்.

அவ்வா வெங்கடராம ராவ், தனது 7 சகோதரர்கள் மற்றும் வேறு சிலருடன் சேர்ந்து, 150 நிறுவனங்களை போலியாக தொடங்கியுள்ளார். அவற்றின் மூலம், மேம்படுத்திய மனை, பண்ணை நிலம் அல்லது நல்ல வட்டியுடன் கூடிய முதிர்வுத்தொகை வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடு திரட்டியுள்ளனர்.

அவ்வாறு, 32 லட்சத்து 2 ஆயிரத்து 626 முதலீட்டாளர்களின் கணக்குகள் மூலம் ரூ.6 ஆயிரத்து 380 கோடி திரட்டப்பட்டுள்ளது. ஆனால் கடைசியில், மனைகளோ, முதலீட்டாளர்களின் பணமோ திருப்பி அளிக்கப்படவில்லை. முதலீடு திரட்டுவதற்கு இவர்கள் ரிசர்வ் வங்கியிடம் அனுமதியும் பெறவில்லை.

இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட அமலாக்க இயக்ககம், அவ்வா வெங்கடராம ராவ், அவ்வா வெங்கடநாராயண ராவ், அவ்வா ஹேமசுந்தர வரப்பிரசாத் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தது. ஐதராபாத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், 14 நாள் கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விஜயவாடா, ஐதராபாத்தில் உள்ள மோசடி நிதி நிறுவன அதிபர்கள் மற்றும் ஆடிட்டர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் ரூ.22 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com