அரசை கவிழ்க்கும் வேலையில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. தங்களை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது: சஞ்சய் ராவத்

அரசை கவிழ்க்கும் வேலையில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவை தங்களை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
அரசை கவிழ்க்கும் வேலையில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. தங்களை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது: சஞ்சய் ராவத்
Published on

சொத்துகள் முடக்கம்

மராட்டியத்தில் தொடர்ந்து மந்திரிகள் மோசடி புகாருக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க கூறியதாக எழுந்த புகாரில் அனில் தேஷ்முக் தனது உள்துறை மந்திரி பதவியை இழக்க நேரிட்டது. இதேபோல சிவசேனா மந்திரி அனில் பரப் மற்றும் துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு எதிராக ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அஜித் பவாருக்கு தொடர்புடைய சர்க்கரை அலையின் ரூ.65 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது. இதுதொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை

சக்கரை ஆலை சொத்துகள் முடக்கப்பட்டது போன்ற மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த வகையான அரசியல் நல்லதல்ல. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சர்க்கரை ஆலைகளை சார்ந்துள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. போன்றவற்றை பயன்படுத்தி பின்னால் இருந்து தாக்குகிறார்கள். ஒருவர் நேருக்கு நேர் போராட வேண்டும். அரசை கவிழ்க்கும் வேலைகளில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. தங்களை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது. மகா விகாஸ் அகாடி அரசை பலவீனப்படுத்த பா.ஜனதா கடுமையாக முயன்றாலும் இந்த அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. மகா விகாஸ் அகாடி கூட்டணி சட்டமன்ற சபாநாயகர் பதவியை வெல்லப்போவது உறுதி.அரசின் தலைவிதி குறித்து சந்தேகத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குவதில் எந்த பயனும் இல்லை. சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு செல்லும். வேட்பாளரை காங்கிரஸ்

தலைமையே தீர்மானிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com