தன்னை சிவனின் அவதாரம் என்று கூறி பக்தர்களை ஏமாற்றிய போலி சாமியார் - குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்

போலி சாமியாருக்கு சொந்தமான ரூ.36.90 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தன்னை சிவனின் அவதாரம் என்று கூறி பக்தர்களை ஏமாற்றிய போலி சாமியார் - குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்
Published on

மும்பை,

நாசிக்கில் பிரபல ஜோதிடராக வலம் வந்தவர் போலி சாமியார் அசோக் காரத் (வயது56). இவர் மீது திருமணமான பெண் ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின் பேரில், கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி நாசிக் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் பல பெண்களிடம் அத்துமீறியதும் தெரியவந்தது.

அமலாக்கத்துறை

அவர் போலீஸ் காவலில் இருந்தபோதே, கடந்த மே 19-ம் தேதி அமலாக்கத்துறை பணமோசடி வழக்கில் கைது செய்தது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த போலி சாமியார் மற்றும் அவரது மனைவி உட்பட 6 பேர் மீது மும்பை சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை தற்போது முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அவதார பூஜைகள்

இந்த குற்றப்பத்திரிகையில் கூறியதாவது:-

அசோக் கராத் தனக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவும், தான் சிவபெருமானின் அவதாரம் என்றும் கூறி பக்தர்களை நம்ப வைத்துள்ளார். பக்தர்களின் மத நம்பிக்கையை பயன்படுத்தி, அவர்களுக்கு நோயை குணப்படுத்துவதாகவும், தொழிலில் லாபம் பெற வைப்பதாகவும் கூறி "அவதார பூஜைகள்” என்ற பெயரில் கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களை ஏமாற்றி பறித்துள்ளார்.

போலி சாமியார்

மேலும் மிரட்டியும் பலரிடம் பணம் பறித்ததாக இவர் மீது புகார்கள் உள்ளன. பக்தர்களிடம் ஏமாற்றிய பணத்தை 2 கூட்டுறவு கடன் சங்கங்களில், ஊழியர் ஒருவரின் உதவியோடு பல பினாமி கணக்குகளை தொடங்கி பதுக்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை கொண்டு நாசிக், அகமது நகர், சோலாப்பூர், புனே மற்றும் மும்பை ஆகிய இடங்களில் தனது குடும்பத்தினர் பெயரில் அசையும், அசையா சொத்துகளை வாங்கியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை போலி சாமியாருக்கு சொந்தமான ரூ.36.90 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com