சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தாவூத் இப்ராகிம் தம்பி இக்பால் காஸ்கர் கைது

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தாவூத் இப்ராகிம் தம்பி இக்பால் காஸ்கரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தாவூத் இப்ராகிம் தம்பி இக்பால் காஸ்கர் கைது
Published on

தாவூத் மீது வழக்கு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர்பு குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ஆவார். தாவூத் இப்ராகிம் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தை ஹவாலா மூலம் பயங்கரவாதத்தை பரப்ப பயன்படுத்துவதாகவும், இந்தியாவில் தேசவிரோத செயல்கள், இரு சமூகத்தினர் இடையே மோதலை உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தாவூத் இப்ராகிம் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை தாவூத் இப்ராகிம், அவரது சகோதரி ஹசீனா பார்க்கர் மற்றும் கூட்டாளிகள் இக்பால் மிர்ச்சி, சோட்டா சகீல், ஜாவித் சக்னா உள்ளிட்டவர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்து உள்ளது.

மும்பையில் சோதனை

இதில், இந்த கும்பல் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் மூலம் சேர்த்த ஹவாலா பணம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை மும்பையில் தாவூத் இப்ராகிம், அவரது கூட்டாளிகள் தொடர்புடைய 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். தாவூத் இப்ராகிம் ஆதிக்கம் அதிகம் உள்ள நாக்பாடா பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல அமலாக்கத்துறையினர் தாதா சோட்டா சகீலின் மைத்துனர் சலீம் புருட்டையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இக்பால் காஸ்கர் கைது

இந்தநிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் காஸ்கரை கைது செய்து உள்ளது. இக்பால் காஸ்கர் 3 மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு மோக்கா சட்டத்தின் கீழ் தானே போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தானே ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கைது செய்து உள்ளது.

இக்பால் காஸ்கரை அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது இக்பால் காஸ்கர் தாவூத் இப்ராகிம் பெயரை கூறி மும்பையில் சினிமா பிரபலங்கள், கட்டுமான அதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக அமலாக்கத்துறை கோர்ட்டில் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறப்பு கோர்ட்டு வருகிற 24-ந் தேதி வரை இக்பால் காஸ்கரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com