

புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (சுமார் ரூ.11,700 கோடி) பண மோசடி நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.
இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மீது சி.பி.ஐ.யிடம் வங்கி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால், மனைவி அமி மற்றும் மெகுல் சினுபாய் சோக்சி உள்ளிட்ட பங்குதாரர்கள் மீது கடந்த மாதம் 31ந்தேதி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதற்கிடையே நிரவ் மோடி தன்னுடைய குடும்பத்துடன் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டார் எனவும் கூறப்படுகிறது. நிரவ் மோடி ஜனவரி 1-ம் தேதியே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து ஒவ்வொருவராக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டனர் என கூறப்படுகிறது.
ரூ. 280 கோடி மோசடி வழக்கு தொடர்பாக நிரவ் மோடியின் வீடு மற்றும் நிறுவனங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
நிரவ் மோடி, அவருடைய மனைவி அமி மற்றும் மெகுல் சினுபாய் சோக்சியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வெளியுறவுத்துறையிடம் அமலாக்கப்பிரிவு கேட்டுக் கொண்டது.
நிரவ் மோடி மற்றும அவருடைய நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவு மேற்கொண்ட சோதனையில் ரூ. 5100 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் விலைஉயர்ந்த கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகளை சிபிஐ விசாரித்து வருகிறது, இதுவரையில் கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.