நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம் - பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம் என்று டெல்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் விஞ்ஞான பவனில் எழுச்சிக்கான கல்வி தலைமைத்துவம் என்ற பொருளில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அறிவும், கல்வியும் புத்தகங்களோடு கட்டுப்படுத்தப்பட வேண்டியவை அல்ல. கல்வியின் நோக்கம், ஒரு நபரின் ஒவ்வொரு பரிமாணத்துக்கும் சம நிலையிலான வளர்ச்சியை அடையச்செய்வதுதான். புதுமை என்பது இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியப்படாது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம்.

முழுமையான கல்விதான் நம்மை மனிதர்கள் ஆக்குகின்றன என்று சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தி கூறி இருக்கிறார். நமது பழமையான பல்கலைக் கழகங்களான தக்சீலா, நாளந்தா, விக்ரம்சீலா ஆகியவவை அறிவுடன் புதுமைக்கும் சமமான முக்கியத்துவம் அளித்தன.

புதுமை என்ற ஒன்று இல்லாவிட்டால், நாம் வாழ்கிற இந்த வாழ்க்கை ஒரு சுமையைப்போல தோன்றும். இந்திய பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் நாங்கள் எதிர்கொள்கிற சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு எங்களுக்கு உதவும். நாம் நமது கல்வி நிறுவனங்களை ஒன்றுக்கொன்றுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் வகுப்பறையில் படிக்கிற கல்வியை, நாட்டின் எதிர்பார்ப்புகளுடன் இணைக்க வேண்டும். குழந்தைகளை புதுமையை நோக்கி ஊக்குவிக்கவும், உயர் கல்வியைப் பெறவும், எழுச்சி பெறவும் அடல் டிங்கரிங் லேப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு கல்வியில் உள்ள கட்டமைப்பு மற்றும் முறைமைகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும்.

சமூகத்து நல்ல ஆசிரியர்களை தயார்ப்படுத்தி அளிப்பதுவும் முக்கியம். எண்ணியல் கல்வியை பரப்புவதற்கும், அரசு திட்டங்கள் குறித்து பெரிதான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிஞர்களும், மாணவர்களும் பொறுப்பேற்க வேண்டும். இளைய தலைமுறையினர் இந்தியாவுக்கு உலகளாவிய அடையாளத்தை தந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கல்வி தொடர் பான பிரதமர் மோடியின் கண்ணோட்டத்தை புகழ்ந்தார். கல்வியில் உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புகளை உருவாக்குவதற்கு, மத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com