மொழி அடிப்படையில் கல்வி நிதி வழங்கப்படுவது இல்லை - மத்திய மந்திரி விளக்கம்

கோப்புப்படம்
தேசிய கல்விக் கொள்கை பன்மொழித் தன்மையை ஊக்குவிப்பதில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி, தேசிய கல்விக்கொள்கை தொடர்பான சில கேள்விகளை கேட்டு இருந்தார். அதற்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதே அரசின் கொள்கை. தேசிய கல்விக் கொள்கை 2020, பன்மொழித் தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்திய மொழிகளை துடிப்பாக வைத்திருக்க முயற்சிப்பதிலும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையில், குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரை மற்றும் முன்னுரிமையாக 8-ம் வகுப்பு வரை கற்பித்தல் மொழியானது தாய்மொழி, உள்ளூர் மொழி அல்லது பிராந்திய மொழியில் இருக்க வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்வது பள்ளி மற்றும் உயர்கல்வியுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் கொள்கை வலியுறுத்துகிறது. மாணவர்கள் எந்த இந்திய மொழியில் படிக்க விருப்பம் உள்ளதோ அதில் படிக்கலாம். நிதி ஒதுக்கீடு என்பது மொழி அடிப்படையில் செய்யப்படுவதில்லை. மாறாக தேவை மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






