

காசிப்பூர்,
உத்தர பிரதேசத்தின் காசிப்பூரில் டாக்டர் பிரிஜேந்திரா என்பவரின் திருமணம் இன்று நடந்தது. இதில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?
கடந்த 2002ம் ஆண்டு உத்தர பிரதேச முதல் மந்திரியாக ராஜ்நாத் சிங் இருந்தபொழுது, ஒரு ஏழை சிறுவனை தத்தெடுத்து உள்ளார். திறமை வாய்ந்த அந்த சிறுவனின் கல்வி செலவுக்கு நிதியுதவி வழங்கும் பொறுப்பினை எடுத்து கொண்டார்.
அதன் பின்னர் அந்த ஏழை சிறுவன் நன்றாக படித்து, தேர்ச்சி பெற்று டாக்டராக முன்னேறியுள்ளார். அவரது திருமணம் இன்று நடந்தது. அதில் மத்திய மந்திரி சிங் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளார். இதன்பின் சிங் கூறும்பொழுது, ஏழையான மற்றும் திறமையான குழந்தைகளை தத்தெடுத்து மக்கள் உதவி செய்ய வேண்டும் என கூறினார்.
டாக்டர் பிரிஜேந்திராவின் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன். இது நிச்சயம் எனக்கு ஒரு திருப்தி தரும் மற்றும் மகிழ்ச்சியான சிறந்த தருணம் ஆகும் என கூறினார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகரில் உள்ள பைசாபாத்தில் கொசைகஞ்ச் சமூக சுகாதார மையத்தில் டாக்டராக பிரிஜேந்திரா பணியாற்றி வருகிறார்.