முயற்சி திருவினையாக்கும்... வறுமையில் போராடி முனைவர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

ஆந்திர பிரதேசத்தில் குடும்பத்திற்காக தினக்கூலியாக வேலை செய்து, வறுமையில் போராடி பெண் ஒருவர் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Image Courtesy: ndtv
Image Courtesy: ndtv
Published on

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சகே பாரதி. 3 சகோதரிகளில் மூத்தவர். அடுத்தடுத்து பெண்களாக பிறந்ததில் இவரது தந்தைக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இதனால், அவர்களை அலட்சியப்படுத்தி உள்ளார். பாரதியின் தாத்தா தலையிட்டு, அவரை நன்றாக படிக்க வைத்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.

எனினும், அவரது தாத்தா மறைந்ததும், தாய் மாமாவுக்கு பாரதியை திருமணம் முடித்து வைத்தனர்.

அவரது கணவர் சிவபிரசாத், பாரதியை விட அவர் படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார். வறுமை மற்றும் கடின நிலையில் இருந்து வெளிவர கல்வியே பெண்களுக்கான ஒரே வழி என அவர் கூறி வந்துள்ளார்.

நீ என்னவாக விரும்புகிறாயோ, அதனை செய் என ஆதரவாக கூறி, அதனை நிறைவேற்றியும் உள்ளார். ஆனால், அன்றாட வாழ்க்கையை நடத்த இந்த தம்பதி போராட வேண்டியிருந்தது.

குடும்பத்திற்காக விவசாய கூலியாக வேலை செய்த பாரதி, பஸ்சிலும், ஆட்டோவிலும் மற்றும் சில சமயங்களில் நடந்தும் கூட படிப்பதற்காக தொலைதூரத்திற்கு சென்று, வந்து உள்ளார்.

முதுநிலை படிப்பில் பாரதி தேர்ச்சி பெற்றதும், முனைவர் பட்டம் பெற வேண்டும் என அவரது கணவர் விரும்பியுள்ளார். 6 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் படித்து, ரசாயனத்தில் பிஎச்.டி பட்டமும் பெற்றார் பாரதி.

ஒரு வேலை கிடைப்பதே இறுதியான இலக்காக இருக்கும். ஆனால் அது எங்களின் கைகளில் இல்லை என சிவபிரசாத் கூறுகிறார். உதவி பேராசிரியர் பணி கிடைத்தால், கனவு பூர்த்தியாகும்.

காலியிடம் மற்றும் அதற்கான தகுதி இருந்தபோதும், பாரதிக்கு வேலை கிடைக்கவில்லை என வருத்தத்துடன் கூறுகிறார் அவரது கணவர். ஜெகன்அண்ணா நல திட்டத்தின் கீழ் உள்ளூர் எம்.எல்.ஏ.விடம் வீடு கேட்டும் எதுவும் கிடைக்கவில்லை என பாரதி கூறுகிறார்.

பிஎச்.டி. முடித்தும் வேலை இல்லாத சூழலில், தனது 6-ம் வகுப்பு மகளை தொடர்ந்து படிக்க வைப்பதில் என்ன அர்த்தம் உள்ளது என எண்ண கூடிய நிலையில் தற்போது பாரதியின் கணவர் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com