

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் விமான போக்குவரத்து சேவை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. குறிப்பிட்ட அளவிலேயே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தா நோக்கி சென்ற விஸ்டாரா விமான நிறுவனத்தின் யு.கே.-775 என்ற விமானம் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் சிறிது குலுங்கியது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். இந்த சம்பவத்தில் விமானத்திற்குள் இருந்த 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களுக்கு விமானத்தில் வைத்து, முதலுதவி சிகிச்சையும், உடனடிய மருத்துவ உதவியும் வழங்கப்பட்டு உள்ளது. விமானம் தரையிறங்கிய பின்பு அவர்கள் 3 பேரையும் கொல்கத்தாவில் உள்ள சர்னோக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.