

மும்பை,
மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. மேலும், கனமழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், மராட்டியத்தின் மும்பையில் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பையின் சகினகா பகுதியை சேர்ந்த முதியவர் அஸ்லாம் ஷேக் (55) நேற்று மாலை அப்பகுதியில் உள்ள மழைநீர் சூழ்ந்த சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு திறந்த நிலையில் இருந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த அஸ்லாம் ஷேக் உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஸ்லாம் ஷேக்கின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.