

புதுடெல்லி,
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் ஒளிவுமறைவற்ற தன்மையை உருவாக்க தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்தல் பத்திரங்கள் விற்பனை மார்ச் 1ந் தேதி தொடங்குகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை கிளைகளில் இந்த தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். மார்ச் 10ந் தேதிவரை இவை விற்கப்படும்.
இந்திய குடிமகனாக உள்ளவர்கள், தனியாகவோ அல்லது மற்ற தனிநபர்களுடன் சேர்ந்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அமைப்புகளோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டசபை தேர்தலில், ஒரு சதவீதத்துக்கு குறையாத ஓட்டுகளை வாங்கிய, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், இந்த தேர்தல் பத்திரங்களை பெற்றுக்கொள்ள தகுதி படைத்தவை ஆகும்.
இந்த கட்சிகள், தங்கள் வங்கிக்கணக்கு மூலமாக, தேர்தல் பத்திரங்களை பணமாக ஆக்கிக் கொள்ளலாம். தேர்தல் பத்திரம் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அதற்குள் வங்கியில் கொடுத்து பணம் ஆக்காவிட்டால், அதன்பிறகு பணம் ஆக்க முடியாது. தேர்தல் பத்திரங்கள் கொடுக்கப்பட்ட அதே நாளில், வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
இத்தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.