

பெங்களூரு,
உப்பள்ளி-தார்வார், கலபுரகி, பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளின் தேர்தல் வருகிற 3-ந் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. இதில் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் 3 மாநகராட்சிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனதா தளம் (எஸ்), கலபுரகி, உப்பள்ளி-தார்வார் மாநகராட்சிகளில் போட்டியிட்டுள்ளது.
இந்த தேர்தலில் முக்கியமாக பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தான் நேரடி போட்டி எழுந்துள்ளது. இந்த தேர்தலையொட்டி பகிரங்க பிரசாரம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அந்த மூன்று மாநகராட்சிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் 82 வார்டுகளும், கலபுரகியில் 55 வார்டுகளும், பெலகாவியில் 58 வார்டுகளும் உள்ளன.
இரட்டை நகரமான உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள் 16 பேரை 6 ஆண்டுகள் நீக்கி அந்த மாவட்ட பா.ஜனதா தலைவர் அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 6-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.