எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு நாளை தேர்தல் ஆணையம் பதில்: செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு

வாக்கு திருட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பீகாரில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே, கடந்த 1-ஆம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டனர் அல்லது இருப்பிடம் தெரியவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், “பீகாரில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அவர்கள் பெயர்கள் சேர்க்கப்படாததற்கான காரணங்களையும் இணைத்து வெளியிட வேண்டும். பொதுமக்களுக்குத் தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது. வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற அதிகபட்ச வெளிப்படைத்தன்மை அவசியம் என்பதால் இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம்.
65 லட்சம் பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல், பஞ்சாயத்து மட்டத்திலான அலுவலகங்களிலும், மாவட்ட அளவிலான தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இந்தப் பட்டியலை எங்கு பார்க்கலாம் என்ற விவரத்தைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க மாநில மொழிப் பத்திரிகைகளிலும், ஆங்கில நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும். தொலைக்காட்சிச் செய்தி சேனல்கள், வானொலி ஆகியவற்றிலும் விளம்பரப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, ராகுல் காந்தி நாளை பீகாரில் யாத்திரை தொடங்க உள்ளார். பீகாரில் உள்ள சாசராம் பகுதியிலிருந்து கயா, முங்கர், பஹல்பூர், கதிகார், பூர்ணியா, மதுபானி, தர்பங்கா, பச்சிம் சாம்பரான் வழியாக அரா வரை ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார். நாளை தொடங்கும் இந்த யாத்திரை வரும் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரைக்கு ‘வாக்கு அதிகார் யாத்திரை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் நாளை பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை டெல்லி ராய்சினா சாலையில் உள்ள தேசியப் பத்திரிகையாளர் மையத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளது. இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது, வாக்குத் திருட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஆதாரங்களுடன் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






