

கவுகாத்தி,
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் பட்ருதீன் ஜமால் என்பவரின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் ஞான மோட்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன. அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வோம் என்று பாஜக நம்பிக்கையில் உள்ளது. ஆனால், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிடுவோம் என்று காங்கிரஸ் நம்பிக்கையில் உள்ளது.
இந்நிலையில், வாக்குஎண்ணிக்கை நடைபெற இன்னும் பல நாட்கள் உள்ள நிலையில் தற்போதே அசாமில் அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றால் காங்கிரஸ் மற்றும் அந்த கூட்டணியில் இடம்பெற்று வெற்றிபெற்ற வேட்பாளர்களை தங்கள் வசம் இழுக்க பாஜக முயற்சிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் பாஜக தற்போதே குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையடுத்து, பாஜக குதிரைபேர முயற்சி ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவி வருவதால் அசாமில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 20 பேர் முதல்கட்டமாக ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்ட 19 பேரில் முதல்கட்டமாக 14 பேர் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பட்ருதீன் ஜமாலும் உடன் சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் தனியார் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் அசாம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.