பெரும்பான்மையை கடந்து முன்னிலை.. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்கிறது

ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
TDP Crosses Halfway Mark In Andhra
Published on

அமராவதி:

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

ஆந்திராவில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க. 10 இடங்களிலும் போட்டியிட்டது.

வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம்- பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் இருந்தது. காலை 10 மணி நிலவரப்படி தெலுங்குதேசம் கட்சி 106 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதன்மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து முன்னிலையில் இருப்பதால் தெலுங்குதேசம் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. கூட்டணி கட்சியான பா.ஜ.க. 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சி 15 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஜனசேனா கட்சியும் 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. வாக்கு சதவீதத்தை பொருத்தவரை தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இரண்டும் கிட்டத்தட்ட நெருங்கி வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி தெலுங்கு தேசம் 45 சதவீத வாக்குகளும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 40 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com