

பாட்னா,
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர், 2024-ம் ஆண்டு ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கினார். 48 வயதாகும் அவர் பாட்னா விமான நிலையம் அருகே உள்ள 'ஷேக்புரா ஹவுஸ்' என்ற பிரமாண்ட பங்களாவில் தங்கியிருந்து கட்சி பணிகளை மேற் கொண்டு வந்தார்.
இந்த பங்களா, பா.ஜனதா முன்னாள் எம்.பி.யும், ஜன் சுராஜ் கட்சியின் தேசிய தலைவருமான உதய் சிங்கின் குடும்பத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர், பாட்னா புறநகர் பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றிற்கு தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார். அடுத்த பீகார் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை அங்கிருந்தே தனது அரசியல் பணிகளை மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
“பாட்னாவில் இதுவரை நான் தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டேன். பாட்னா ஐ.ஐ.டி. அருகே அமைந்துள்ள 'பீகார் நவநிர்மான் ஆசிரமமே' இனி எனது புதிய முகவரி. அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவரை, இந்த ஆசிரமமே எனது இருப்பிடமாக இருக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.