26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி

தேர்தல் பத்திர விவகாரத்தில் 26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியது.
26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
Published on

டெல்லி,

தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா 2018ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன.

இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதிபெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15ம் தேதி ரத்து செய்தது.

மேலும், 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் தற்போதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? அரசியல் கட்சிகளுக்கு யார்? யார்? நிதி கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை மார்ச் 6ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க ஜுன் 30ம் தேதி வரை கால அவகாசம் தரும்படி சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. கடந்த 15ம் தேதி உத்தரவு பிறப்பித்தும் கடந்த 26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரி கேள்வி எழுப்பினார்.

மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்கள் மற்றும் நிதி பெற்ற அரசியல் கட்சி விவரங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியது யார்? நிதி பெற்றது யார்? என எஸ்.பி.ஐ. வங்கி வழங்கும் விவரங்களை 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வழங்க கால அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com