ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது - மத்திய அரசு உறுதி

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை, அவற்றில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதிபட தெரிவித்தது.
ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது - மத்திய அரசு உறுதி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, சில எதிர்க்கட்சிகள் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. எந்திரங்களில் தில்லுமுல்லு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டின. எனவே, பழையபடி, ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வருமாறு வலியுறுத்தின.

ஆனால், அந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், பொதுத்துறை நிறுவனங்களான பெல், எல்காட் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்படுகின்றன. அதற்கு தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப வல்லுனர் குழு, தொழில்நுட்ப வழிகாட்டுதலை அளிக்கிறது.

எந்த வெளிநாட்டு நிறுவனத்துடனும் எவ்வித தொழில்நுட்ப ஒத்துழைப்பும் வைத்துக்கொள்ளாமல், முற்றிலும் உள்நாட்டிலேயே இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த எந்திரங்கள் தொழில்நுட்பரீதியாக தரமானவை. இவற்றில் தில்லுமுல்லு செய்ய முடியாது. சுதந்திரமாக, நியாயமாக, வெளிப்படையாக பயன்படுத்துவதற்கான கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை தேர்தல் கமிஷன் புகுத்தி உள்ளது.

கடந்த 1989 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மேற்கொண்டு பயன்படுத்த தகுதியற்றவை என்று கடந்த 2007-ம் ஆண்டு தேர்தல் கமிஷன் அறிவித்தது. 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை, அடுத்த தலைமுறை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. அவையும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக, மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அளிக்கப்பட்டன.

அதன்பின்னர், நடப்பாண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதனுடன் நடந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்துவதற்காக, புதிய ஓட்டுப்பதிவு எந்திரங்களும், அவற்றுடன் கூடிய உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டன. அதற்கு (வரி சேர்க்காமல்) ரூ.2 ஆயிரத்து 56 கோடி செலவானது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com