மின்னணு வாக்குப்பதிவு தொடரும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற்ற முடியாது தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறையே தொடரும் எனவும், ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற்ற முடியாது எனவும் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா திட்டவட்டமாக கூறினார்.
மின்னணு வாக்குப்பதிவு தொடரும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற்ற முடியாது தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு நடத்தப்படும் தேர்தல்களில் மக்கள் ஓட்டு போடுவதற்கு வாக்குச்சீட்டு முறைக்கு பதிலாக, மின்னணு முறை பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த ஓட்டுப்பதிவு முறையால் பல்வேறு நன்மைகள் உள்ளன.

இந்த எந்திரங்களால் ஒருபுறம் நன்மை இருந்தாலும், மறுபுறம் விமர்சனங்களும் இருந்து வருகிறது. அதாவது இந்த எந்திரங்களில் முறைகேடு செய்து தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முடியும் என எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மின்னணு தொழில்நுட்ப வல்லுனரான சையது சுஜா என்பவர் சமீபத்தில் புகார் கூறியிருந்தார். அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் எனவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்படி மோசடி செய்துதான் பா.ஜனதா வெற்றி பெற்றது என்றும் அவர் கூறினார்.

இதை சுட்டிக்காட்டி வரும் எதிர்க்கட்சிகள், விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறியுள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சிலரின் தூண்டுதலால் வாக்குப்பதிவு எந்திரங்கள் கால்பந்து போல பந்தாடப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை மிக மிக தெளிவாக கூறிக்கொள்கிறேன். அதாவது வாக்குச்சீட்டு முறைக்கு நாங்கள் மீண்டும் திரும்பமாட்டோம். திடகாத்திரமான ஊழியர்களை கொண்டு வாக்குச்சீட்டுகளை தூக்கிச்செல்லும் சகாப்தத்துக்கு நாடு ஒருபோதும் திரும்பாது.

அதேநேரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த எந்த விமர்சனத்தையும், பரிந்துரையையும் ஏற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு அடிபணியமாட்டோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் பயன்படுத்துவோம்.

இவ்வாறு சுனில் அரோரா கண்டிப்பாக தெரிவித்தார்.

முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து புகார் கூறிய சையது சுஜாவுக்கு எதிராக டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com