கார், சுற்றுலா பஸ்சை நள்ளிரவில் மறித்து கடுமையாக தாக்கிய யானை

அச்சமடைந்த கார் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டார். காருக்குள்ளேயே அமர்ந்து கொண்டார்.

கார், சுற்றுலா பஸ்சை நள்ளிரவில் மறித்து கடுமையாக தாக்கிய யானை
Published on

இடுக்கி,

கேரளாவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், மூணாறு-மரயூர் சாலையில் நேற்றிரவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே இரவு 11 மணியளவில் யானை ஒன்று வந்துள்ளது. அந்த யானை முதலில், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா பஸ்சை கடுமையாக தாக்கியது.

அதன் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து எறிந்தது. இதன்பின்னர் சாலைக்கு வந்த அந்த யானை சொகுசு கார் ஒன்றை வழிமறித்து நின்றது. இதனால், அச்சமடைந்த கார் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டார். காருக்குள்ளேயே அமர்ந்து கொண்டார். மற்றொரு நபரும் உள்ளே இருந்துள்ளார்.

அப்போது யானை கார் கண்ணாடியை உடைத்ததுடன், காரின் மேற்கூரை மற்றும் முன்பகுதியை அடித்து, தாக்கியது. இந்த சம்பவம் பற்றி வன துறையினருக்கு தகவல் சென்றது. அவர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். எனினும், யானை அந்த பகுதியில் இருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்று விட்டது.

காருக்குள் இருந்த 2 பேரும் உயிர் தப்பி விட்டனர். அவர்கள் கோட்டயம் மாவட்டத்தின் எரத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். படையப்பா யானையே அந்த பகுதியில் அடிக்கடி வந்து செல்கிறது என்றும் அதற்கு மதம் பிடித்து இருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com