

திருவனந்தபுரம்,
பிறவியிலேயே மரபணு எலும்பு நோயால் பாதிக்கப்பட்டு, கருணைக்கொலைக்கு பரிந்துரைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 'மாயா' என்ற 18 மாதப் பெண் யானைக் குட்டிக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ளது.
கேரளாவின் மலையத்தூர் வனப்பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தாயிடமிருந்து பிரிந்து தவித்த நிலையில் மாயா என்ற பெண் குட்டியானை வனத்துறையினரால் மீட்கப்பட்டது. பின்னர் கோடநாடு அபயாரண்யம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.
பிறவியிலேயே எலும்பு அடர்த்தி குறைபாடு கொண்டிருந்த மாயா, கடந்த ஜூலை மாதம் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. இதில் அதன் முன்னங்கால்களில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையான மாயாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது.
மாயாவின் எலும்புகள் மிகவும் பலவீனமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வதும் கடினமாக இருந்தது. தொடர் வலியால் துடித்துக் கொண்டிருந்த யானைக் குட்டியைத் துன்பத்திலிருந்து விடுவிக்க, கருணைக்கொலை செய்வதே சிறந்தது என மருத்துவக் குழு பரிந்துரைத்தது.
இருப்பினும், மாயாவைக் காப்பாற்ற இறுதி முயற்சியாக கேரள வனத்துறையினர் நாட்டின் முன்னணி யானை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ஆனந்த் அம்பானியின் 'வந்தாரா' வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மாயாவிற்கு இலவசமாக உயர் சிகிச்சை அளிக்க முன்வந்தது.
இதையடுத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரத்யேக சரக்கு விமானம் மூலம், மருத்துவக் குழுவினரின் கண்காணிப்புடன் மாயா குஜராத்தின் ஜாம்நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜாம்நகரில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வனவிலங்கு மருத்துவமனையில் அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு மாயாவிற்கு ஹார்மோன் சிகிச்சை, ஹைட்ரோதெரபி (நீர் சிகிச்சை) உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. முழுமையாகக் குணமடைந்த பின்னர் மாயா மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.