

ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராய்கர் மாவட்டம், தரம்ஜெய்கர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பரதாபாலி கிராமத்தின் 437-வது வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், யானையின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர்.
விசாரணையின் போது, குற்றவாளிகளை பிடிக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சென்ற அந்த நாய், அருகிலிருந்த வயல்வெளியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியை அடையாளம் காட்டியது.
காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் வயலில் மின்சார கம்பி வைத்திருந்ததும், அதில் எதிர்பாராதவிதமாக சிக்கிய ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.