2 பேரை கொன்ற காட்டு யானை பிடிபட்டது

ராமநகரில் 2 பேரை கொன்ற காட்டு யானையை 5 கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். அந்த யானை லாரியில் ஏறாமல் முரண்டு பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

ராமநகர்:

ராமநகரில் 2 பேரை கொன்ற காட்டு யானையை 5 கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். அந்த யானை லாரியில் ஏறாமல் முரண்டு பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

யானை தாக்கி 2 பேர் சாவு

ராமநகர் மாவட்டம் கனகபுரா மற்றும் சென்னப்பட்டணாவில் கடந்த 2 வாரமாக ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. மேலும் கடந்த மாதம் (மே) 30-ந் தேதி கனகபுரா அருகே ஹொசகப்பாலு கிராமத்தை சேர்ந்த காலய்யா (வயது 60) என்பவரையும், சென்னப்பட்டணா தாலுகா விரோபசந்திரா கிராமத்தை சேர்ந்த காவலாளியான வீரபத்ரய்யா (56) என்பவரை கடந்த 3-ந் தேதியும் அந்த காட்டு யானை தாக்கி கொன்றது.

காட்டு யானை தாக்கி ராமநகரில் 2 பேர் பலியானதால், கிராம மக்கள் மத்தியில் பீதி உண்டானது. காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு கிராம மக்களும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, சென்னப்பட்டணாவுக்கு சென்ற மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே வீரபத்ரய்யா குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் கொடுத்ததுடன், அந்த யானையை பிடிக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.

பிடிபட்டது

இதையடுத்து, காட்டு யானையை பிடிக்க கடந்த 3 நாட்களுக்கு முன்பாக சென்னப்பட்டணா தாலுகாவுக்கு அர்ஜுனா, அபிமன்யு, பீமா, மகேந்திரா, ஸ்ரீகண்டா ஆகிய 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. சென்னப்பட்டணாவில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானையை பிடிக்கும் பணி நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக அந்த யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலையில் சென்னப்பட்டணா அருகே அரலாலு சந்திரா கிராமத்தையொட்டி இருக்கும் வனப்பகுதியில் வைத்து 5 கும்கி யானைகளின் உதவியுடன், கிராம மக்களை பீதிக்கு உள்ளாக்கி வந்த காட்டு யானையை வனத்துறையினர் பிடித்தனர். அந்த யானைக்கு 40 வயது இருக்கும். அது ஆண் யானை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

முரண்டு பிடித்ததால் பரபரப்பு

பின்னர் அரலாலு சந்திரா கிராமத்தில் இருந்து லாரியில் ஏற்றி அந்த யானையை கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் லாரியில் ஏறாமல் அந்த யானை முரண்டு பிடித்தது. லாரியில் ஏற மறுத்ததுடன், ஆக்ரோஷமாகவும் காணப்பட்டது. இதையடுத்து, யானையின் உடலில் கயிறுகளை கட்டி, கிரேன் மூலமாக லாரியில் தூக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த காட்டு யானை லாரியில் ஏற்றப்பட்டது.

அதன்பிறகு, அந்த யானை ஆக்ரோஷமாகவே இருந்தது. பின்னர் கிராமத்தில் இருந்து அந்த யானை கொண்டு செல்லப்பட்டது. கடந்த 2 வாரங்களாக அட்டகாசம் செய்ததுடன், 2 பேரை கொன்ற யானை பிடிபட்டதால் ராமநகர் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com