கலப்பையைக் கட்டி வயலை உழுத யானை: விவசாயியின் வித்தியாசமான முயற்சி!

வயலில் மெதுவாக அடி மேல் அடி வைத்து மண்ணைப் பண்படுத்தி உழும் காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
கலப்பையைக் கட்டி வயலை உழுத யானை: விவசாயியின் வித்தியாசமான முயற்சி!
Published on: 

அசாம்,

"மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை..." என்ற வரிகள் 'அல்லி அரசாணி மாலை' என்ற நாட்டுப்புற பாடலில் இடம் பெற்றுள்ளன. அறுவடை செய்த நெற்கதிர்களில் இருந்து நெல் மணிகளைப் பிரித்தெடுக்க மாடுகளைப் பிணைத்து அதன் மேல் நடக்க வைப்பதை 'போரடித்தல்' என்பார்கள். ஆனால், அன்றைய மதுரையில் செந்நெல் விளைச்சல் மிக அதிகமாக இருந்ததால், மாடுகளைக் கொண்டு போரடித்தால் காலம் போதாது (மாளாது) என்பதற்காக, பிரமாண்டமான யானைகளைக் கட்டிப் போரடித்தார்கள் என்ற தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை இந்த வரிகள் காலம் கடந்து உணர்த்துகின்றன.

கலப்பையைக் கட்டி வயலை உழுத யானை

ஆயிரம் மைல்களுக்கு அப்பால், வடகிழக்கு இந்தியாவின் அசாம் பள்ளத்தாக்கிலும் ஒரு விசித்திரமான, ஆச்சரியமூட்டும் வாழ்வியல் தொடர்கிறது. தென்மதுரையில் நெல்மணிகளைப் பிரிக்க யானைகள் பயன்பட்டன என்றால், அசாமின் அடர்ந்த காடுகளையும், கரடுமுரடான களிமண் நிலங்களையும் பக்குவப்படுத்தி, விவசாயத்திற்காகப் பிரமாண்டமான யானைகளைக் கொண்டு ஒரு விவசாயி நிலத்தை உழுதுள்ளார்.

அசாம் மாநிலம், கோலகாட் மாவட்டம், நுமாலி நகர் அருகே உள்ள முர்புலானி கிராமத்தைச் சேர்ந்தவர் அதுல் கர்மாகர்,விவசாயி. இவர் மாணிக் என்ற ஆண் யானை ஒன்றை வளர்த்து வந்தார். இவர் தனது விவசாய நிலத்தில் கடுகு சாகுபடிக்காக நிலத்தை பக்குவப்படுத்தும் விதமாக உழவுப்பணிக்காக யானையைப் பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில் பாகனின் வழிகாட்டுதலின்படி, 'மாணிக்' என்ற அந்த யானையின் உடலில் கலப்பையைக் கட்டி, அது வயலில் மெதுவாக அடி மேல் அடி வைத்து மண்ணைப் பண்படுத்தி உழும் காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு

நவீன காலத்தில் டிராக்டர்கள் போன்ற எந்திரங்கள் இருக்கும்போது. யானையின் பலத்தைப் பயன்படுத்தி உழவு செய்யும் இந்த அரிய காட்சி பலரது கவனத்தை ஈர்த்தாலும், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கம்பீரமான வனவிலங்குகளை இதுபோன்ற கடினமான விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவது அவற்றுக்குச் செய்யப்படும் அநீதி என்றும், எந்திரங்களைப் பயன்படுத்துவதே சிறந்தது என்றும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com