உணவு கொடுத்த ஆட்டோ டிரைவரை மிதித்துக் கொன்ற யானை - மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

பாகன் உமேஷ் தன்னிடம் இருந்த கைத்தடியால் யானையின் தலையில் தட்டியதையடுத்து யானை திடீரென ஆக்ரோஷமானது.
உணவு கொடுத்த ஆட்டோ டிரைவரை மிதித்துக் கொன்ற யானை - மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
Published on

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ராஜ் நகர் பகுதி அருகே நடைபெற்ற விழாவிற்காக யானை ஒன்று வரவழைக்கப்பட்டது. அந்த யானையின் பாகன் உமேஷ் கோஸ்வாமி, நகர் பகுதியில் யானையை ஊர்வலமாக அழைத்துச் சென்றார். பொதுமக்கள் அந்த யானைக்கு உணவு, பணம் உள்ளிட்டவற்றை கொடுத்தனர்.

அப்போது ஆட்டோ டிரைவர் விஜய் ஹோல்கர்(வயது 49) என்பவர், யானைக்கு வெல்லம் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் யானை சற்று முரண்டு பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாகன் உமேஷ், தன்னிடம் இருந்த கைத்தடியால் யானையின் தலையில் தட்டியுள்ளார். இதையடுத்து யானை திடீரென ஆக்ரோஷமானது.

அதற்கு உணவு கொடுத்த ஆட்டோ டிரைவர் விஜய் ஹோல்கரை தரையில் தள்ளிவிட்டு, அவரது வயிற்றில் மிதித்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த யானை ஒருவழியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டது.

யானை தாக்கியதில் படுகாயமடைந்த விஜய் ஹோல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், யானை பாகன் உமேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் யானையை நகர் பகுதிக்குள் கொண்டு வர வனத்துறையிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com