

பெங்களூரு,
தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 16 கிலோ யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஆனேக்கல் போலீசாருக்கு, தமிழ்நாட்டில் இருந்து யானை தந்தங்களை கடத்தி வருவது பற்றிய ரகசிய தகவல் கிடைத்தது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக பெங்களூருவுக்கு கடத்தல் கும்பல் வருவது பற்றி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து. ஆனேக்கல் அருகே முத்தாலயமடு வனப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்தனர். அப்போது காரில் இருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு 3 பேரையும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் யானை தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சதீஸ்வரன்(வயது 44), சங்கர்(38), சரத்குமார்(32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அங்கிருந்து தான் யானை தந்தங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் மொத்த எடை 16 கிலோ எனவும், அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி என்றும் போலீசார் தெரிவித்தனர். கைதான 3 பேரும் அந்த யானை தந்தங்களை தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்து, தங்களுக்கு தெரிந்த நபர்களிடம் விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
ஆனால் யானை தந்தங்கள் 3 பேருக்கும் கிடைத்தது எப்படி?, இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து, கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.