கொரோனா பாதிப்பை சமாளிக்க மாநிலங்களுக்கு அவசரகால நிதி உதவி - மத்திய அரசு ஒப்புதல்

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கான அவசரகால நிதி உதவி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
கொரோனா பாதிப்பை சமாளிக்க மாநிலங்களுக்கு அவசரகால நிதி உதவி - மத்திய அரசு ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

கொரோனா நோய்க்கிருமி பரவுவதால் நாட்டில் பெரும் பாதிப்பும், நெருக்கடியான சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நோய்க்கிருமியை கட்டுப்படுத்தி சுகாதார திட்டங்களை மேம்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு 100 சதவீதம் நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், சுகாதார ஆணையர்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டில் கொரோனா பரவுவதை தொடர்ந்து தேசிய அளவிலும், மாநிலங்களும் சுகாதார நடவடிக்கைகளையும், திட்டங்களையும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதாவது தேவையான அளவுக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதோடு, ஆய்வுக்கூடங்களை அமைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு உள்ளது. இதற்காக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிதி ஒதுக்கீடு திட்டம் வருகிற 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும். வருகிற ஜூன் மாதம் வரையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிகள் அமைப்பது, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், வெண்டிலேட்டர்களுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வுக்கூடங்களை அமைப்பது, பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள் வாங்குவது, கூடுதல் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவது கட்ட சுகாதார திட்ட மேம்பாட்டு பணிகள் வருகிற ஜூலை முதல் 2021-ம் ஆண்டு மார்ச் வரையிலும், மூன்றாவது கட்ட பணிகள் 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு மார்ச் வரையிலும் செயல்படுத்தப்படவேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com