மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - கண் கலங்கிய திரவுபதி முர்மு


மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - கண் கலங்கிய திரவுபதி முர்மு
x

மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை அங்குள்ள குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்தினர்.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவின் மயூர்பஞ்சில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி பிறந்தார். அவருக்கு நேற்று 67-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் தலைவர்கள் பலரும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'பொது சேவை, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, அனைவருக்கும் நம்பிக்கை மற்றும் பலத்தின் கலங்கரை விளக்கமாகும். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார். மக்கள் சேவையில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறட்டும்' என கூறியிருந்தார்.

இதைப்போல ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் பலரும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இதைப்போல முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, மோகன் சரண் மாஜி, ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோரும் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், நாட்டின் முன்னேற்றம், நலன் மற்றும் நீதிக்கான ஜனாதிபதி முர்முவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நாட்டை உண்மை மற்றும் நல்லொழுக்கத்தின் பாதையில் தொடர்ந்து வழிநடத்துகிறது என பாராட்டு தெரிவித்து இருந்தது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது உத்தரகாண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பிறந்த நாளான நேற்று அவர் அங்குள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்குள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக அந்த குழந்தைகள் பாடல் பாடி ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அவர் பேசும்போது, 'என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. மிகவும் அழகாக பாடுகிறார்கள். தங்கள் இதயத்தில் இருந்து பாடினார்கள்' என பாராட்டினார்.

மேலும் அவர், 'இந்திய வரலாறு முழுவதும் மனிதாபிமானம் மற்றும் உள்ளடக்கத்தால் நிறைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கும், அவர்கள் வளர சம வாய்ப்புகளை வழங்குவதற்கும் அரசின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்றைய சகாப்தம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சகாப்தம். மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன், மாற்றுத் திறனாளிகள் கூட முக்கிய நீரோட்டத்திற்கு பங்களிக்க முடியும்' என்றும் கூறினார்.

1 More update

Next Story