

கவுகாத்தி,
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலில் அசாம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில், அசாமில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.
இந்நிலையில், அசாமில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்பொழுது, கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைமை தலைவர்கள் மூத்த தலைவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவமளித்து வருகிறார்கள்.
இந்த முறை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வரும் நல்ல வாய்ப்பு உள்ளது. ஏ.ஐ.யூ.டி.எப். கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம். அது தவறாக முடிந்து விடும் என அவர்களிடம் நாங்கள் கூறினோம். அது உண்மையாகவே ஆகிவிட்டது என கூறியுள்ளார்.
மூத்த தலைவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி தனது ராஜினாமா கடிதத்தினை சபாநாயகர் பிஸ்வஜித் தைமரியிடம் கொடுத்துள்ளார்.