கம்ப்யூட்டர்களை கண்காணிக்க அதிகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

கம்ப்யூட்டர்களை கண்காணிக்க 10 உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கம்ப்யூட்டர்களை கண்காணிக்க அதிகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
Published on

புதுடெல்லி,

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குனரகம், உளவுப்பிரிவு உள்ளிட்ட 10 அமைப்புகள் கண்காணிக்கவும், அதில் பரிமாறப்படும் தகவல்களையும், சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களையும் ஆய்வு செய்யவும் அதிகாரம் வழங்கப்படுவதாக அறிவித்தது.

இதற்கு காங்கிரஸ் தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், மோடி அரசு வேட்டை அரசாக மாறிவிட்டது. பா.ஜனதா அரசு தனது தோல்விகளால் மூர்க்கத்தனமாக தகவல்களை தேடும் நிலைக்கு சென்றுவிட்டதை இது தெளிவாக காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த்சர்மா, இந்த உத்தரவின் மூலம் பா.ஜனதா அரசு இந்தியாவை கண்காணிப்பு மாநிலமாக மாற்றிவிட்டது. இது தனிநபர் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான இறுதி தாக்குதல். தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான நேரடி மோதல் என்று கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், யாராவது உங்கள் கம்ப்யூட்டர் உள்பட அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்கிறார்கள் என்றால் அது சர்வாதிகார நாடு. இது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த உத்தரவு தேச பாதுகாப்புக்கு மட்டுமே என்றால், இதற்காகத்தான் மத்திய அரசில் ஏற்கனவே பல அமைப்புகள் உள்ளதே. ஆனால் ஏன் அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்பட வேண்டும்? பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஏன் ஒவ்வொரு இந்தியனையும் குற்றவாளி போல நடத்துகிறீர்கள்? இந்த உத்தரவு தொலைபேசி ஒட்டுகேட்பு வழிகாட்டுதல், தனிநபர் உரிமை தொடர்பான தீர்ப்பு, ஆதார் தீர்ப்பு ஆகியவற்றை மீறுவது ஆகும் என்று கூறியுள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியா 2014 மே மாதத்தில் இருந்து அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் இருக்கிறது. இறுதிக்கட்ட ஒரு சில மாதங்களில் மோடி அரசு அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளை துண்டிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது தானா? என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்- மந்திரி உமர் அப்துல்லா, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் கம்ப்யூட்டர்களும் கண்காணிக் கப்படுமா? சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவு சட்டப்பூர்வமானதா என ஆழமாக ஆராயும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதேபோல சமாஜ்வாடி கட்சியின் ராம்கோபால் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதளம் மனோஜ் ஜா உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி தலைவர் என்.கே.பிரேமசந்திரன் எம்.பி., இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நிதி மந்திரி அருண் ஜெட்லி, எதிர்க்கட்சிகள் ஒரு சிறு புள்ளியை மலையாக்குகின்றனர். எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் மதிப்புள்ளவை. அதிலிருந்து அவர்களுக்கு உண்மை தெரிந்துள்ளது. இந்த உத்தரவு 2009-ம் ஆண்டு காங்கிரஸ் பிறப்பித்த விதிகளின்படியே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உத்தரவு அந்தந்த காலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com