

ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நேற்று பின்னிரவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, டூரு என்ற பகுதியின் அருகே உள்ள சிஸ்தரகம் என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து தானியங்கி இயந்திரங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாத இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இந்த துப்பாக்கிச்சண்டையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு காஷ்மீரில் மொபைல் இணைய தளசேவை முடக்கப்பட்டுள்ளது.