

சீராய்வு கூட்டம்
வாராந்திர கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநில சுகாதார இயக்க திட்ட இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு புதுச்சேரியின் கொரோனா நிலவரம், 3-வது அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விகிதம், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை ஆகியவை குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார்.
அதிகாரிகள்
கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த்மோகன், வருவாய்த்துறை செயலாளர் அசோக்குமார், உள்ளாட்சித்துறை செயலாளர் வல்லவன், சுகாதாரத்துறை செயலாளர் அருண், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய்சவுத்ரி, மாநில கொரோனா மேலாண்மை பொறுப்பு அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி சாய்ரா பானு, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
ஊக்கப்படுத்த வேண்டும்
புதுவையில் தடுப்பூசி திருவிழாவினை தீவிரப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மக்களிடையே தடுப்பூசி குறித்த தகவல்களை கொண்டு சேர்க்கவேண்டும். அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களை இதில் ஈடுபடுத்தலாம்.எதிர்காலத்தில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணம், அரசு நலத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கேட்பதற்கான சூழல் உருவாகலாம் என்பதை எடுத்துக்கூறி தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட பயனாளிகளுக்கு அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு என்று தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டும்.
ஆகஸ்டு 15-ந்தேதிக்குள்...
ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி போடுவதற்கு மக்களை ஊக்கப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாள வேண்டும். கொரோனா பணிக்குழு அமைத்து தினசரி நிலவரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்கவேண்டும். அதன் அடிப்படையில் திட்டமிடுதல் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.