ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, ஒரு லட்சம் பேர் திரண்டதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் - போலீசார் குவிப்பு

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் ஒரு லட்சம் கரசேவகர்கள் திரண்டதால் பதற்றம் நிலவுகிறது.
ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, ஒரு லட்சம் பேர் திரண்டதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் - போலீசார் குவிப்பு
Published on

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் பா.ஜனதா அரசு இதுபற்றி வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.

இதனால் விசுவ இந்து பரிஷத், சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதை வலியுறுத்தும் விதமாக அயோத்தி நகரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட மாநாட்டுக்கு விசுவ இந்து பரிஷத் அழைப்பு விடுத்து உள்ளது. இந்த மாநாடு அங்குள்ள பார்கர்மா மார்க் பகுதியில் நடக்கிறது. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கரசேவகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதில் பங்கேற்பதற்காக நேற்று காலையிலேயே 1 லட்சத்துக்கும் அதிகமான கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்து விட்டனர்.

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் அயோத்தியில் இன்று தனிப்பட்ட முறையில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளார். இதற்காக அவர் தனது மகன் ஆதித்யாவுடன் நேற்று அயோத்தி வந்து சேர்ந்தார்.

ராமர் கோவில் கட்டுவதற்காக எதையும் சந்திக்கத் தயார் என்று அண்மைக்காலமாக இந்து அமைப்புகளின் தலைவர்கள் பேசி வருவதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

இதுபற்றி உத்தரபிரதேச மாநில போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்து அமைப்புகளின் மாநாட்டையொட்டி கூடுதல் டி.ஜி.பி., ஒரு டி.ஐ.ஜி., 3 மூத்த சூப்பிரண்டு, 10 கூடுதல் சூப்பிரண்டுகள் தலைமையில் அதிரடி படையினர், கமாண்டோ படையினர், மாநில போலீசார் என 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நகரில் 13 இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் சிவசேனா தனிப்பட்ட முறையில் கேட்டிருந்த மாநாட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றார்.

அயோத்தி நகரில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் பல்வேறு முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. ராமஜென்ம பூமி பகுதியில் மக்கள் நடமாடுவதற்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

நகரில் பதற்றம் நிலவுவதால் ஆள் இல்லாத குட்டி விமானங்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அயோத்தியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இதையும் மீறி அயோத்தியில் கரசேவகர்கள் பல்வேறு வழிகளில் நகருக்குள் திரண்ட வண்ணம் உள்ளனர். அவர்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதனிடையே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், அயோத்தி நிலைமையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்கவேண்டும். தேவைப்பட்டால் அங்கு ராணுவத்தை அனுப்பவும் உத்தரவிடவேண்டும். ஏனென்றால் பா.ஜனதாவும், அதன் கூட்டாளிகளும் எந்த அளவிற்கும் செல்வார்கள் என்றார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com