

புதுடெல்லி:
அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பண மோசடி விசாரணையில், மேலும் 1,021 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற கடன்களை நோக்கத்திற்கு மாறாக பயன்படுத்தியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஸ்டேட் வங்கிபுகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் நிறுவனங்கள் பொதுமக்களிடம் திரட்டிய 15,548 கோடி ரூபாய் நிதி முறைகேடாக வேறு பயன்பாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, அனில் அம்பானி குழுமத்துக்குச் சொந்தமான பல்வேறு சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன. தற்போது, ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனம் வைத்துள்ள ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் உள்ளிட்ட 1,021 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையுடன் சேர்த்து, இதுவரை இந்த வழக்கில் 20,367 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 4 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 77.86 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.