ஆயுதப்படை போலீசாருக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் - ரெயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

பயணத்திற்கான ஏற்பாடுகளை ரெயில்வே துறை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுதப்படை போலீசாருக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் - ரெயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதற்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 3.4 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசார் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை மத்திய ரெயில்வே துறை திறம்பட மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுதப்படை போலீசாருக்கு சுமூகமான பயணத்தை ரெயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும், கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போன்று ஆயுதப்படையினரை அழைத்துச் செல்வதில் காலதாமதம் உள்ளிட்ட புகார்கள் எழாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஆயுதப்படை போலீசாரின் பயணங்களை கண்காணிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்க வேண்டும் எனவும், பிராந்திய அளவில் அதிகாரிகளை நியமித்து பயணத்தை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஆயுதப்படையினர் பயணம் செய்யும் ரெயில்களில் தரமான உணவு, மின்விசிறிகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ உதவி உள்ளிட்டவை தயாராக இருப்பதை ரெயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com