

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை சபாநாயகர் எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆஷிஷ் பானர்ஜி. இந்நிலையில், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் அமைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று காலை தூக்கு போட்டு இறந்து கிடந்த நிலையில் அவருடைய உடல் கைப்பற்றப்பட்டது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராம்பூர்ஹாட்டில் 5 முறை முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆஷிஷ், பள்ளி கல்வி மந்திரியாகவும், விவசாய மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். முந்தைய சட்டசபையில் துணை சபாநாயகராக இருந்த அவர், 2026 தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், அவருடைய அறையில் இருந்து தற்கொலை குறிப்பை நாங்கள் கண்டெடுத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதில், கட்சியின் தவறுகளை வாழ்நாள் முழுவதும் நான் சுமந்து கொண்டிருக்க முடியாது. என்னுடைய வாழ்வில் எந்த பணிக்கு ஈடாகவும், நான் ஒரு பைசா கூட வாங்கியதில்லை என அந்த குறிப்பு தெரிவிக்கின்றது. அதில், அவருடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் இறுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அரசியலில் நுழைந்ததே ஒரு தவறு என உணர்ந்து விட்டேன் என்றும் அவர் எழுதியுள்ளார்.