

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் மீனவ தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி மத்திய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இந்த வரைவு வெளியிடப்படவில்லை. எனவே, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை வருகிற அக்டோபர் 21-ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.