எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடி பாக்கி: ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி குற்றவாளி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடி பாக்கி வைத்த விவகாரத்தில், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடி பாக்கி: ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி குற்றவாளி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடி பாக்கி வைத்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இந்த பணத்தை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது.

ரிலையன்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரும், ஆர்காம் நிறுவன தலைவருமான அனில் அம்பானி எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் மேற்கொண்டதில், அந்த நிறுவனத்துக்கு ரூ.550 கோடி கொடுக்க வேண்டும். இதில் கோர்ட்டு உத்தரவுப்படி ஏற்கனவே ரூ.118 கோடி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள தொகைக்கு வட்டியுடன் ரூ.453 கோடி பாக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த தொகையை செலுத்த சுப்ரீம் கோர்ட்டு பலமுறை அவகாசம் வழங்கியும் ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை. எனவே எரிக்சன் நிறுவனம் சார்பில் அனில் அம்பானி உள்ளிட்டவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், வினீத் சரண் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடி பாக்கி வைத்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பில் ஈடுபட்ட அனில் அம்பானி குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். எரிக்சன் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.453 கோடியை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் கோர்ட்டை அவமதித்ததற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்ப்ராடெல் ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.1 கோடி அபராதம் செலுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். இதை செலுத்த தவறினால் இந்த நிறுவனங்களின் தலைவர் மேலும் 1 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை மதிப்பதாக, அனில் அம்பானி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கூறினார். தங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை ஆர்காம் நிறுவனம் செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com