அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

தட்டுப்பாட்டால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும், எனவே அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலங் களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, அத்தியாவசிய பொருட்களின் வரத்து இல்லாததால், அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலை உயர்ந்து விட்டதாகவும் பல்வேறு மாநிலங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்திக்கும், எடுத்துச் செல்வதற்கும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருந்தது.

ஆனால், ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அத்தியாவசிய பொருட்களை பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது, கொள்ளை லாபம் ஈட்டுவது, யூக வாணிபத்தில் ஈடுபடுவது போன்ற செயல் களில் ஈடுபடுவதற்கும், அதனால் விலைவாசி உயர்வதற்கும் உள்ள வாய்ப்பை மறுக்க முடியாது.

ஆகவே, ஊரடங்கு காலத்தில், 1955-ம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை பிரயோகப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் போதிய அளவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காக, பொருட்கள் இருப்பு வைக்க உச்ச வரம்பு நிர்ணயித்தல், விலைக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல், உற்பத்தியை பெருக்குதல், வர்த்தகர்களின் கணக்குகளை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழான குற்றங்கள், கிரிமினல் குற்றங்களாகும். அதற்கு 7 ஆண்டு ஜெயில் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம். இந்த கடுமையான சட்டத்தை மாநில, யூனியன் பிரதேசங்கள் பிரயோகிக்க வேண்டும்.

இதற்காக மத்திய அரசின் முன்அனுமதி பெறுவதில் இருந்து ஜூன் 30-ந் தேதி வரை மாநிலங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் விலக்கு அளித்து உள்ளது.

மேலும், 1980-ம் ஆண்டின் கருப்புச்சந்தை தடுப்பு சட்டத்தின் படியும், குற்றவாளிகளை காவலில் வைப்பது பற்றி மாநில அரசுகள் பரிசீலிக்கலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com