

கோவா,
கோவாவில் நடந்த மாநாட்டில் மத்திய எரிசக்தித் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
"பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவை 20 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை” என்று உறுதியாக தெரிவித்தார். மேலும் அவர், “இந்த திட்டத்தால் நாட்டுக்கு ரூ.1.6 லட்சம் கோடி அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1.4 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளுக்குச் சென்றடைந்துள்ளது.
எத்தனால் பெட்ரோலால் வாகனங்கள் பழுது அடைவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை. எத்தனால் பெட்ரோல் வாகனங்களுக்கு ஏற்றது. 2003-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களில் பழுதுகள் ஏற்படுகின்றன.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. தங்களுக்கு சாதகமான மற்றும் மலிவான விலையில் எண்ணெய் வழங்கும் எந்தவொரு நாட்டிடமிருந்தும் இந்தியா தொடர்ந்து எரிபொருளை வாங்கும்” என்றும் குறிப்பிட்டார்.