குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய யூனியன் தலைவர் பங்கேற்பு

ஐரோப்பிய யூனியன் மற்றும் கவுன்சில் தலைவர்கள் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே 2004 ஆம் ஆண்டு முதல் மூலோபாய உறவு நீடித்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் இருதரப்புக்கும் இடையே இருதரப்பு உறவுகள் வலுவடைந்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா ஆகிய இருவரும் வரும் ஜனவரி 26-ந்தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் வரும் 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த பயணத்தின்போது, 27-ந்தேதி டெல்லியில் நடைபெறும் 16-வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






