மனைவியை கொன்று உடல்பாகங்களை குக்கரில் வேகவைத்த முன்னாள் ராணுவ வீரர் கைது


மனைவியை கொன்று உடல்பாகங்களை குக்கரில் வேகவைத்த முன்னாள் ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2025 10:29 AM IST (Updated: 23 Jan 2025 2:19 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிரஷர் குக்கரில் வேக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரமடைந்து அவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, பிரஷர் குக்கரில் வேகவைத்து ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பெண்ணின் குடும்பத்தினர் காணவில்லை என போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் பெண்ணின் கணவர் குருமூர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

முன்னதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரரான குருமூர்த்தி, செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மாதவியை கடந்த 18ம் தேதியில் இருந்து காணவில்லை. இது குறித்து மாதவியின் பெற்றோர் குருமூர்த்தியிடம் கேட்டதற்கு சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து மாதவியை காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக குருமூர்த்தியிடம் விசாரித்தபோது தனது மனைவியை கொலை செய்ததை குருமூர்த்தி ஒப்புக்கொண்டார். கோபத்தில் மனைவியை கொலை செய்துவிட்டதாகவும், தடயங்களை அழிக்க மனைவியின் உடலை வீட்டு பாத்ரூமில் வைத்து துண்டுகளாக வெட்டி, அதனை சமையல் செய்ய பயன்படும் குக்கரில் வைத்து வேக வைத்ததாக தெரிவித்தார்.

அதோடு எலும்பை உரலில் போட்டு இடித்து மீண்டும் வேக வைத்து அனைத்தையும் சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று ஏரியில் போட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். உடலை வெட்டி முழுவதுமாக வேகவைக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டதாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். குருமூர்த்தி சொன்ன ஏரியில் போலீசார் மோப்ப நாய்களின் துணையோடு உடல் பாகங்களை தேடினர். உடல் பாகங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் குருமூர்த்தியை கைது செய்த போலீசார், தங்களது காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story