தெலுங்கானா மந்திரியாக பதவியேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்

முகமது அசாருதீன் 2009ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
ஐதராபாத்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவர் 2009ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.. கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார். அதேவேளை, தெலுங்கானாவில் மாநில மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மந்திரி சபையில் முகமது அசாருதீனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. நியமன மந்திரியாக முகமது அசாருதீன் இடம்பெற்றுள்ளார். தெலுங்கானா மந்திரியாக அசாருதீன் இன்று பதவியேற்றுள்ளார். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன் தோல்வியடைந்தார்.
தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இடைத்தேர்தலில் தொகுதியை கைப்பற்ற அசாருதீனுக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.






