அத்துமீறிய வரதட்சணை கொடுமை... மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய அரசு ஊழியர்


அத்துமீறிய வரதட்சணை கொடுமை... மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய அரசு ஊழியர்
x
தினத்தந்தி 23 July 2025 3:58 PM IST (Updated: 23 July 2025 4:01 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை கண்காணிக்க அரசு ஊழியர் தனது வீட்டின் குளியலறை உள்பட அனைத்து அறைகளிலும் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த அரசு ஊழியருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவியும் அதே ஊரில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி சில நாட்களுக்கு இவர்களது இல்லற வாழ்க்கை மகிழ்சியுடன் கழிந்தது. ஆனால் மனைவியின் மீது கணவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் இவர்களது குடும்ப வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.

அந்த அரசு ஊழியர், தனது மனைவியை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்து, தனது வீட்டின் குளியலறை உள்பட அனைத்து அறைகளிலும் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார். இதற்கிடையில் அவரது குடும்பத்தினர் வரதட்சணையாக பணம் மற்றும் புதிய கார் வேண்டும் என்று கேட்டு அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த கொடுமையின் உச்சகட்டமாக, மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என அவரது கணவரே மிரட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியரின் வீட்டில் இருந்த கேமராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story